எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரிஜ் பூஷன் சிங்
- மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர்.
- இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான்.
லக்னோ :
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கூறி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி நகரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரிஜ் பூஷன் பேசியதாவது:-
'எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்கூட, நானே தூக்கில் தொங்குவேன் என்று மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். கடந்த 4 மாதங்களாக, என்னை தூக்கிலிட வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு என்னை தூக்கிலிடவில்லை. எனவே அவர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசச் சென்றார்கள். கங்கையில் பதக்கங்களை வீசுவதால் பிரிஜ் பூஷன் தூக்கிலிடப்பட மாட்டார். உங்களிடம் சான்று இருந்தால் அதை கோர்ட்டிடம் கொடுங்கள். கோர்ட்டு என்னை தூக்கில் போட்டால், அதை ஏற்றுக்கொள்கிறேன்.
அனைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எனது குழந்தைகள் போன்றவர்கள். நான் அவர்களை குறைசொல்ல மாட்டேன். அவர்களின் வெற்றியில் எனது ரத்தமும், வியர்வையும்கூட இருக்கிறது.
சிறிதுகாலம் முன்புவரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் என்னை மல்யுத்தத்தின் கடவுள் என்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றபோது இந்தியா உலகளவில் 20-வது இடத்தில் இருந்தது. இன்று எனது கடின உழைப்பின் காரணமாக, உலகின் 5 சிறந்த மல்யுத்த அணிகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது.
இரவும் பகலும் மல்யுத்தமே வாழ்க்கை என்று வாழ்ந்தவன் நான். மல்யுத்தத்தில் இந்தியா வென்ற 7 ஒலிம்பிக் பதக்கங்களில் 5 பதக்கங்கள் எனது பதவி காலத்தில் வந்தவை. எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
அயோத்தியில் வரும் 5-ந்தேதி நான் நடத்தும் 'ஜன் சேத்னா மகா பேரணி'யில் எல்லோரும் திரளாக பங்கேற்க வேண்டும்.'
இவ்வாறு அவர் கூறினார்.