கார்த்திகை மாத திருமண சீசனில் ரூ.6 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெறும்- வர்த்தகர்கள் கூட்டமைப்பு
- கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன.
- இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.
புதுடெல்லி:
வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை கார்த்திகை மாத திருமண சீசன் ஆகும். எனவே அடுத்த வாரம் முதல் திருமண சீசன் களைகட்ட உள்ளது.
கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் இந்தியா முழுவதும் 35 லட்சம் திரும ணங்கள் நடைபெற்றன. அதன் மூலம் ரூ.4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
ஆனால் இந்த ஆண்டு சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருமண சீசனில் வர்த்தகம் 41 சத வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த ஆண்டு திருமண சீசனில் 18 முகூர்த்த நாட்கள் உள்ளன. எனவே வர்த்தகம் அதிகரிக்க இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஒட்டுமொத்த திருமண சீசன் வர்த்தகத்தில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.
குறைந்தபட்சமாக தலா ரூ.3 லட்சம் செலவில் 10 லட்சம் திருமணங்களும், அதிகபட்சமாக ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவில் 50 ஆயிரம் திருமணங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தின்போது பொருட்கள் மற்றும் சேவைகளை பெற அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தங்கத்துக்கு 15 சதவீதம், ஆடைகளுக்கு 10 சதவீதம், வீட்டு உபயோக சாதனங்களுக்கு 5 சதவீதம், உலர் பழம், இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம், மளிகை மற்றும் காய்கறிகளுக்கு 5 சதவீதம், பரிசு பொருட்களுக்கு 4 சதவீதம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
சேவையை பொருத்தவரையில், திருமண மண்டபத்துக்கு 5 சதவீதம், கேட்டரிங் சர்வீசுக்கு 10 சதவீதம், அலங்காரம், போக்குவரத்துக்கு 3 சதவீதம், போட்டோ, வீடியோவுக்கு 2 சதவீதம் செலவிட வேண்டியிருக்கும்.
இந்த தகவலை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.