பீகாரில் சிஏஏ அமல்படுத்தப்படாது: பாஜகவை குழப்பும் நிதிஷ்குமார்
- நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
- இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.
பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.