பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் கொள்முதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
- ஊட்டச்சத்து அடிப்படையில் உரங்களை மானிய விலையில் வழங்க ஒப்புதல்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எத்தனால் கொள்முதல் செய்யும் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1, 2022 முதல், 31 அக்டோபர் 2023 வரையிலான பருவத்தில் எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோக திட்டத்தின் கீழ், பல்வேறு கரும்புகளின் மூலப் பொருட்களிலிருந்து எத்தனால் பெறப்படுகிறது. இந்த எத்தனாலுக்கான கொள்முதல் மற்றும் அதிகபட்ச விலைக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, சி வகையிலான எத்தனால் லிட்டர் ரூ.46.66 லிருந்து ரூ.49.41 ஆகவும், பி வகையிலான எத்தனாலுக்கான விலை லிட்டர் ரூ.59.08 லிருந்து ரூ.60.73-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறு, சர்க்கரைப்பாகு மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டர் ரூ.63.45-லிருந்து ரூ.65.61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் 2022-23 ரபி பருவத்தில் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு வரை ஊட்டச்சத்து அடிப்படையிலால் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அளவில் நைட்ரஜனுக்கு ரூ.98.02-ம், பாஸ்பரசுக்கு ரூ.66.93-ம், பொட்டாஷூக்கு ரூ.23.65-ம், சல்ஃபருக்கு ரூ.6.12-வும், மானியமாக வழங்கப்படும் என்று மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டிவியா தெரிவித்துள்ளார்.