இந்தியா

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது - உச்ச நீதிமன்றம்

Published On 2024-07-18 06:56 GMT   |   Update On 2024-07-18 07:47 GMT
  • ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்.
  • நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று  கேள்வி எழுப்பியது.

நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மருத்துவ படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Tags:    

Similar News