இந்தியா

வரும் 11-ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கிறது

Published On 2023-08-02 17:27 GMT   |   Update On 2023-08-02 17:27 GMT
  • கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை முறைப்படி வழங்கவில்லை.
  • 22-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.

புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்காததால், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தையும் அளித்தார்.

இதனால் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதன்பேரில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையே மழையும் பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் முழுமையான அளவில் தண்ணீர் வரவில்லை.

11-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

Tags:    

Similar News