வரும் 24-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
- தலைவர் ஹல்தர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்
- தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர், டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடக மாநில அணைகளில் இருந்து தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை.
இதனால் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கு தொடர உள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தலின்படி கர்நாடக அரசு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடல்லை. அதை உடனடியாக திறந்து விட ஆணையிடும்படி வலியுறுத்தும்.
அதேவேளையில் அணையில் தண்ணீர் இருப்பு குறித்து கர்நாடகா அறிக்கை சமர்ப்பிக்கும். மேலும், தற்போது மழை பெய்து வருவதால் உபரி நீரையும் சேர்த்து அதிகமாக தண்ணீர் திறந்து விடுவதாக சுட்டிக்காட்டும்.
மேகதாது தடுப்பு அணை தொடர்பாக தமிழக அதிகாரிகள் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள்.