இந்தியா

முத்தலாக் தடை சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Published On 2024-08-19 09:38 GMT   |   Update On 2024-08-19 10:38 GMT
  • முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  • 2019 ஆம் ஆண்டு முத்தலாக்குக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை 'தலாக்' என்று கூறி ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு முத்தலாக்குக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் வாயிலாக விவாகரத்து செய்வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முத்தலாக்குக்கு தடை விதிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மத்திய அரசு கொண்டு வந்த முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவிற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், திருமணமான முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமை மற்றும் பாலின சமத்துவத்திற்கு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம் உதவுகிறது.

முத்தலாக் நடைமுறை அரசியலமைப்பின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

முத்தலாக் நடைமுறையானது திருமணம் எனும் சமூக அமைப்பிற்கு ஆபத்தானது. அந்த நடைமுறை முஸ்லீம் பெண்களின் நிலைமையை மிகவும் பரிதாபகரமானதாக ஆக்குகிறது.

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

அதே சமயம் இந்த சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனைகள் இல்லாததால் கணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காவல்துறையினருக்கு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட விதிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News