இந்தியா

இடஒதுக்கீடு பறிப்பு என ராகுல் காந்தி குற்றச்சாட்டு: காங்கிரசின் போலித்தனம் என பாஜக பதில்

Published On 2024-08-19 04:21 GMT   |   Update On 2024-08-19 04:41 GMT
  • பிரதமர் மோடி அரசியல் சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
  • இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குனர் பதவிகளில் 45 அதிகாரிகளை நேரடியாக நியமிப்பதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபோன்ற நியமனம் மூலமாக "இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பாஜக அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அவர் காங்கிரன் போலித்தனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அஷ்வின் வைஷ்ணவ் வெளியிட்டள்ள எக்ஸ் தள பதவியில் கூறியிருப்பதாவது:-

அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் விவகாரம் காங்கிரஸ் கட்சியின் போலித்தனத்திற்கு சாட்சி. அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறையை கொண்டு வந்ததே UPA அரசுதான். இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் 2005-ல் UPA அரசால் உருவாக்கப்பட்டது. அதற்கு வீரப்ப மொய்லி தலைவராக இருந்தார். நிபுணர்கள் தொடர்பான பணிக்கு, சிறப்பு திறமைகள் உள்ளவர்களை கொண்டு நிரப்ப பரிந்துரைக்கப்பட்டது. யுபிஎஸ்சி மூலம் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறும். இந்த சீர்திருத்தம் ஆட்சியை மேம்படுத்தும்.

இவ்வாறு அஷ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணை செயலாளர்கள், 35 இயக்குனர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

பொதுவாக இத்தகைய பதவிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் "ஏ" போன்ற அனைத்து இந்திய பணி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. தற்போது இந்த பணிகளுக்கு நேரடியாக ஆட்களை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதன் மூலம் மேற்படி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தன.

அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் "யுபிஎஸ்சி-க்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலம் பொது ஊழியர்களை தேர்வு செய்வதன் மூலம் பிரதமர் மோடி அரசியல் சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கியமான பதவிகளை நேரடியாக நிரப்புவதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது.

உயர்மட்ட அதிகாரிகள் உள்பட நாட்டின் முக்கிய பதவிகளில் பின்தங்கிய பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லை என நான் எப்போதும் கூறிவருகிறேன். இதை சரிப்படுத்துவதற்கு பதிலாக நேரடி நியமனத்தால் மேலும் மோசமாக்குகின்றனர்.

இது யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகி வரும் திறமையான இளைஞர்களின் உரிமையை திருடுவது மட்டுமின்றி பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கருத்து மீதான தாக்குதலும் ஆகும்.

ஒரு சில கார்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முக்கியமான அரசுப் பதவிகளில் அமர்ந்து என்ன செய்வார்கள்? என்பதற்கு 'செபி' ஒரு தெளிவான உதாரணம் ஆகும்.

அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராகி பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதியை பாதிக்கும் பிரதமர் மோடியின் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.

ஐ ஏ எஸ் பதவிகளை தனியார்மயமாக்குவது இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர மோடியின் உத்தரவாதம் ஆகும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News