முஸ்லீம்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு ஆதரிக்கமாட்டார்: தெலுங்குதேசம் தலைவர்
- சந்திரபாபு நாயுடு தன்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண் இந்து. மற்றொரு கண் முஸ்லீம் என்று எப்போதும் கூறி வருகிறார்.
- ஒரு கண் பாதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். வளர்ச்சியின் பாதையில் இதை மனதில் கொள்ள வேண்டும் என்கிறார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்ததும் வக்பு போர்டு சட்ட மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஒன்றிரண்டு கட்சிகளும் பல்வேறு ஆட்சேபனை தெரிவித்தன. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (Parliament's Joint Committee) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திரா காந்தி உள்அரங்கத்தில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய தெலுங்குசேதம் கட்சி தலைவர் நவாப் ஜன், முஸ்லீம்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு அனுமதிக்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நவாப் ஜன் கூறுகையில் "சந்திரபாபு நாயுடு தன்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண் இந்து. மற்றொரு கண் முஸ்லீம் என்று எப்போதும் கூறி வருகிறார். ஒரு கண் பாதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். வளர்ச்சியின் பாதையில் நாம் முன்னேறும்போது இதை மனதில் கொள்ள வேண்டும் என்கிறார்.
சந்திரபாபு நாயுடு மதசார்பற்ற மனநிலை கொண்டவர். அவரை நாம் முதல்வராக பெற்றுள்ளோம். இதனால் முஸ்வீம்களுக்கு கேடு விளைக்கும் எந்த மசோதாவையும் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டார்.
நாம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், இந்தியாவின் ஒற்றுமைக்கு கேடுவிளைவிக்க முயற்சிக்கும்போது அதை பொறுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு நவாப் ஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பா.ஜ.க.-வுக்கு மெஜாரிட்டி இல்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஆதரவு அளித்தால் மட்டும் ஒரு மசோதாவை நிறைவேற்ற முடியும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது கடுமையான விவாதம் ஏற்பட்டது. மசூதிகளின் செயல்பாட்டில் தலையிடுவது இந்த மசோதாவின் நோக்கமல்ல என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் முஸ்லீம்கள் மற்றும் அரசியலமைப்பு மீதான தாக்குதல் என எதிர்ப்பு தெரிவித்தன.