ஜெயிலில் மகள் - வாபஸ் வாங்கும் வேட்பாளர்கள்: பரிதவிக்கும் சந்திரசேகர ராவ்
- காங்கிரஸ், பா.ஜ.க என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ் கட்சி திணறி வருகிறது.
- சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வலம் வந்தார்.
ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு பிறகு கட்சி நிலைகுலைந்து விட்டது.
சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வீட்டு சாப்பாடு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகரராவ் மன உளைச்சல் அடைந்துள்ளார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்க திணறி கொண்டிருந்த நேரத்தில் முதல் ஆளாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.
சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர்கள், தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பாலான தலைவர்கள் ஆளும் கட்சியான காங்கிரசிலும் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து வரும் பாரதிய ஜனதா கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர்.
மேலும் கட்சியில் இருக்கும் வலுவான மூத்த தலைவர்கள் இந்த முறை போட்டியிட தயங்குகின்றனர். இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ். கட்சி திணறி வருகிறது.
இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
சந்திரசேகரராவ் முதல் மந்திரியாக இருந்தபோது துணை முதல் மந்திரியாக இருந்தவர் ஸ்ரீஹரி. அவரது மகள் காவ்யா, வாரங்கல் தொகுதி பி.ஆர்.எஸ். வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
சந்திர சேகரராவின் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக வரும் புகார்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவை கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போகவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதேபோல் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வலுவான வேட்பாளர்கள் எல்லோரும் காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு தாவிய நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கி இருப்பது சந்திரசேகரராவ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் பரிதவிப்பில் உள்ளார்.