புதுப்பள்ளி சட்டமன்ற இடைத்தேர்தலில் உம்மன் சாண்டி மகன் போட்டி
- செப்டம்பர் 5-ந்தேதி வாக்குப்பதிவு, 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை
- தொகுதி மக்கள் நினைவில் அப்பா இருந்தாலும், அரசியல் ரீதியான போட்டி
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி புதுப்பள்ளி. இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வான முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம் காலமானார்.
இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவித்தது.
இந்த நிலையில், அவரது மகன் சாண்டி உம்மன் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து சாண்டி உம்மன் கூறுகையில் ''இந்த பொறுப்புக்கு என்னை தேர்வு செய்ததற்கு, கட்சிக்கு நன்றியுள்ளவராக இருப்பேன். இது எனக்கு மிகப்பெரிய சவால்.
எனது தந்தையை புதுப்பள்ளி மக்கள் இன்னும் நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொரு துறையிலும் தோல்வியடைந்த ஆளும் கட்சி கூட்டணிக்கு எதிராக இது அரசியல் போட்டியாக இருக்கும்'' என்றார்.