சாத் பூஜைக்காக டெல்லி அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேட்டி
- 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு டெல்லி முழுவதும் 1,100 இடங்களில் சாத் பூஜைகளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகரத்தில் பெரிய அளவில் சாத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தீபாவளிக்கு பிறகு கொண்டாடப்படும் சாத் பூஜை பூமியில் உயிர்கள் வாழ காரணமாக இருக்கும். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பூஜைகள் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் சாத் பூஜையை பிரமாண்டமாக கொண்டாட அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதுகுறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் இந்த ஆண்டு 1,100 இடங்களில் உள்ள நீர் நிலைகளை டெல்லி அரசு மேம்படுத்தும். மேலும் பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்கான செலவை அரசே ஏற்கும். 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு டெல்லி முழுவதும் 1,100 இடங்களில் சாத் பூஜைகளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவை நகரில் கொண்டாட ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூஜையை கொண்டாட தேவையான மின் வசதி, ஆம்புலன்ஸ்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகரத்தில் பெரிய அளவில் சாத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 69 இடங்களில் ரூ.2.5 கோடி செலவில் மட்டுமே சாத் பூஜை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அரசு நிதி உதவியுடன் 1,100 இடங்களில் சாத் பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படும். டெல்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
கொரோனா உள்ளிட்ட நோய் தொற்றில் இருந்து விடுவிக்கவும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக மக்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.