சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
- மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
- சந்திர சேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
இதைதொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சந்திரசேகர் ராவ் இரண்டு முறை ஆட்சியில் இருந்த நிலையில் சரிவைக் கண்டார்.
தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.