இந்தியா

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு நடவடிக்கை: நொய்டாவில் 25 குழந்தைகள் மீட்பு

Published On 2023-06-07 10:03 GMT   |   Update On 2023-06-07 10:03 GMT
  • கவுதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங் அறிவுறுத்தலின்படி இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

குழந்தைகள், சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதும், அவர்களை பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்துவதும் குற்றச்செயலாகும். ஆனாலும், ஆங்காங்கே குழந்தைகள் வேலைகளில் அமர்த்தப்படுவதும், சாலைகளிலும், சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுவதும் நாடு முழுவதும், குறிப்பாக நகரங்களிலும், பெருநகரங்களிலும் நடந்தவண்ணம் உள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன.

அவ்வகையில், நேற்று ஒருநாள் மேற்கொண்ட நடவடிக்கையில், தலைநகர் டெல்லிக்கு அருகே நொய்டாவில், பிச்சை எடுப்பதிலும், கூலி வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்ட 25 குழந்தைகள், காவல் துறையால் மீட்கப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்ட அறிக்கை:

செவ்வாயன்று, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கவுதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங் அறிவுறுத்தலின்படி இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைல்ட் லைன் நொய்டா, மாவட்ட நன்னடத்தை கண்காணிப்பு அலுவலகம், மற்றும் தொழிலாளர்கள் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஜூன் 1 முதல் ஜுன் 30 வரை, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் குழந்தை பிச்சைக்காரர்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நொய்டாவின் பல மார்க்கெட்டுகளிலும், சாலை சந்திப்புகளிலும் இருந்து 25 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

சிறார் பணியமர்த்தல் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2016ன் படி, 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துதலும் மற்றும் 14-லிருந்து 18 வயது வரையுள்ளவர்களை ஆபத்தான வேலைகளிலும், செயல்களிலும் ஈடுபடுத்தலும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

Tags:    

Similar News