உயிர் காத்த தோழன்; இந்திய கடலோர காவல்படைக்கு சீனா நன்றி
- மும்பை வழியாக பயணித்த சீன கப்பலிலிருந்து உதவி கோரி இந்த மையத்திற்கு ஒரு செய்தி வந்தது
- அன்றிரவு முழுவதும் வானிலை சாதகமாக இல்லை
இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது.
இப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது மும்பையிலுள்ள கடற்சார் மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையம் (Mumbai Rescue Coordination Centre).
அரபிக்கடலில் மும்பை வழியாக பயணித்த எம்வி டாங் ஃபேங் கான் டான் நம்பர் 2 (MV Dong Fang Kan Tan No 2) எனும் சீன ஆராய்ச்சி கப்பலிலிருந்து இவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த கப்பல் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் போது இன் வெய்க்யாங் (Yin Weigyang) எனும் ஒரு மாலுமிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியுடன் கூடிய மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு உடனடி மருத்துவ உதவி வேண்டி, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது.
அந்த சீன கப்பல், அரபிக்கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. முழு இருளில் இருந்த அன்றிரவு முழுவதும் வானிலையும் சாதகமாக இல்லை.
இருப்பினும் அந்த பயணியை காக்க இந்திய கடலோர காவல்படை தீவிரம் காட்டியது. இதனைத்தொடர்ந்து, மும்பையிலுள்ள மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையத்தை சேர்ந்த நிபுணர்கள், நேரத்தை வீணாக்காமல் அவரை காப்பாற்ற வான்வழியாக விரைந்தனர்.
ஸிஜி ஏஎல்ஹெச் எம்கே-3 (CG ALH MK-III)எனும் ஹெலிகாப்டரில் கப்பலுக்கு விரைந்து சென்று அவரை கப்பலிலிருந்து தூக்கி அவசரகால மருத்துவ உதவிகளை செய்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதும் அவரை மீண்டும் அந்த கப்பலின் மருத்துவ நிர்வாக முகவரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பேருதவிக்கு சீனா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"நாங்கள் காக்கிறோம்" (We Protect) எனும் குறிக்கோளுடன் செயலாற்றும் இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சவாலான வானிலையில் கடும் இருள் சூழ்ந்த இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும் ஆபத்தான நேரங்களில் உதவி செய்யும் நண்பனாக வாழும் இந்தியர்களின் பண்பை இது பறைசாற்றுவதாக வைரலாகும் வீடியோவை காண்பவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
In a daring operation, @IndiaCoastGuard #ALH MK-III evacuates a #Chinese national from MV Dong Fang Kan Tan No 2 around 200 Km mid-sea amidst challenging night conditions & extreme weather. Patient was reported chest pain &cardiac arrest symptoms.#SAR #ArabianSea#MaritimeSafety pic.twitter.com/THG0nBZjhi
— Indian Coast Guard (@IndiaCoastGuard) August 17, 2023