வந்தே பாரத் ரெயிலில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி- பயணி அதிர்ச்சி
- பேண்ட்ரி காரில் குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்படுவதாக புகார்.
- இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக்கி ஜெஸ்வானி. இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் ஷீரடிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வந்தே பாரத் ரெயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி மிதந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்கியின் சகோதரி முழுமையாக சாப்பிட்ட பிறகே பூச்சி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, ரெயிலில் உள்ள 'பேண்ட்ரி காரில் புகார் செய்யச் சென்றபோது, குப்பைத் தொட்டியின் அருகே உணவு தயாரிக்கப்பட்டு, கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரிக்கி ஜெஸ்வானி கூறுகையில், "எனது சகோதரி சைவ உணவு உண்பவர். அவர் சாப்பிட்ட பருப்பு குழம்பின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சியைக் கண்டபோது அவள் கிட்டத்தட்ட உணவை முடித்துவிட்டாள்.
அதற்குள் எனது 80 வயது தந்தை உட்பட எனது குடும்பத்தினர் அனைவரும் பருப்பு சாம்பாரை சாப்பிட்டுவிட்டனர். நாங்கள் புகார் செய்ய பேண்ட்ரி காருக்கு சென்றபோது, குப்பைத் தொட்டிக்கு அருகிலேயே உணவு தயாரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டோம். அங்கு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன.
ஏசி சேர் கார் சி5 கோச்சில் பரிமாறப்பட்ட தயிர் கூட கூடுதல் புளிப்புடன் கெட்டுப்போனதாக இருந்தது" என்றார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.