வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்- பனிமூட்டம் தொடர்பான விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழப்பு
- உத்தர பிரதேசத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என அறிவிப்பு
- பஞ்சாபில் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு தொடங்கும் என தகவல்.
வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
அடர்ந்த மூடுபனியால் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளில் நிலவிய அடர்த்தியான மூடுபனியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதைடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.