காங்கிரஸ் ஹமாஸை கண்டிக்கவில்லை, காரணம் இதுதான்...! என்கிறார் அசாம் முதல்வர்
- இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும் இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது
- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். தற்போது வரை இஸ்ரேலில் உயிரிழப்பு 1,400-ஐ தாண்டியுள்ளது. பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேவேளையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹமாஸ் அமைப்பை கண்டிக்காத காங்கிரஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் அது.
காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதை பார்த்து இருப்பீர்கள். ஹமாஸ் தாக்குதல் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நேரம், ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதை கூட்டத்தின்போது ஒவ்வொருவரும் தெரிவித்தனர். ஆனால், ராகுல் காந்தி தெலுங்கானாவில் தேர்தல் வர இருப்பதால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார். காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்ததை நான் உங்களுக்கு சொல்கிறேன். அதன்பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்து சமநிலையில் இருந்திருக்கலாம். அதாவது, நாங்கள் ஹமாஸ் அமைப்பை கண்டிக்கிறோம். அதேவேளையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம் என்ற நிலையை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.
இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். காங்கிரஸ் மிகவும் பழமை வாய்ந்த கட்சி. அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றும் சொல்ல முடியும். இரண்டும் மாறுபட்ட விவகாரம். ஓவைசியின் வாக்கு வங்கியை கணக்கில் கொண்டுள்ளதால், ஹமாஸ் உடன் இணைந்து நிற்கிறது.
ராகுல் காந்தி வாகன ஓட்டுநர் என்பதால், ஒருநாள் காசா சென்று பைக் ஓட்டலாம், அல்லது டிராக்டரில் ஏறலாம்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.