இந்தியா

ஜூன் 4 மோடி விடுவிக்கப்பட்ட தினம்: காங்கிரஸ் பதிலடி

Published On 2024-07-12 13:06 GMT   |   Update On 2024-07-12 13:06 GMT
  • இந்தியாவில் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதியன்று எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.
  • அன்றைய தினம் அரசியல் சாசன படுகொலை தினமான அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதியன்று எமர்ஜென்சியை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்தரிகை குரல் ஒடுக்கப்பட்டது. அன்றைய தினம் இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில் ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ஜூன் 4 மோடி விடுவிப்பு தினம் என பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

10 வருடங்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்த பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் தீர்க்கமான தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கிய 2024 ஜூன் 4-ந்தேதி வரலாற்றில் மோடி விடுவிக்கப்பட்ட தினம்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போடப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவூட்டுவதாக அமையும்.

 காங்கிரசால் இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தை கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் "1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News