இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து பரபரப்பு: மந்திரி ராஜினாமாவால் நெருக்கடியில் காங்கிரஸ்
- மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
- மெஜாரிட்டியான காங்கிரஸ் தோல்வியடைந்ததால், பெரும்பான்மையாக இழந்ததாக பா.ஜனதா கூறி வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பா.ஜனதா நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. அத்துடன் இன்று காலை பா.ஜனதா முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் ஆளுநர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மந்திரி விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.
எம்.எல்.ஏ.-க்களை கட்சி மதிக்கவில்லை என விக்ரமாத்தியா சிங் தெரிவித்துள்ளார். நேற்றைய மாநிலங்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்தனர்.
இமாச்சல பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறுபேரை பா.ஜனதா அரியானாவிற்கு கடத்திச் சென்றதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை எம்.பி. இடத்தை பறிகொடுத்த காங்கிரஸ், தற்போது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.