நாங்கள் 10 வருடம் என்டிஏ-வுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினோம்: கேசி வேணுகோபால்
- என்டிஏ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார்.
- இந்தியா கூட்டணி கே. சுரேஷை நிறுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. 230-க்கும் அதிகமான இடங்களை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி பெற்றுள்ளதால் எந்த விவகாரத்தையும் ஒருமனதாக தேர்வு செய்ய ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது.
நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கிறது. சபாநாயகர் பதவிக்கு என்டிஏ கூடட்ணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கொடுக்க இந்தியா கூட்டணியிடம் என்டிஏ கேட்டுக்கொண்டது. ஆதரவு கொடுக்க வேண்டுமென்றால் துணை சபாநாயகர் பதவி வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால் பாஜக துணை சபாநாயகர் பதவியை கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்வேட்பாளாராக கே. சுரேஷ் என்பவரை நிறுத்தியுள்ளது.
இதனால் தேர்தல் நடைபெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி கேசி வேணுகோபால் கூறியதாவது:-
நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துணை சபாநாயகர் பதவி தர தயராக இருந்தால், நாங்கள் என்டிஏ வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய தயாராக இருக்கிறோம். இரு அவைகளும சமூகமாக நடைபெற பிரதமர் மோடி நேற்று ஒருமித்த கருத்து குறித்து பேசினார்.
அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யும் சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அவர்களும் எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
சபாநாயகர் அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்படும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நாங்கள் துணை சபாநாயகர் பதவியை 10 ஆண்டுகளுக்கு என்டிஏ-வுக்கு வழங்கினோம். நேற்று ராஜ்நாத் சிங் மல்லிகார்ஜூனாவிடம் பேசினார். அப்போது கார்கே, உங்களுடைய வேட்பாளரை ஆதரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் துணை சபாநாயகர் பதவியை விரும்புகிறோம் என்றார். அப்போது ராஜ்நாத் சிங், மோடியிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.
இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.