காங்கிரஸ் கட்சி மட்டுமே தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்துகிறது- அஜய் மக்கன்
- எந்த அரசியல் கட்சியிலும் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுவதில்லை.
- கட்சி விதிகளின்படியே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய் மக்கன் ஜெய்ப்பூரில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினா.
அப்போது பேசிய அவர், கட்சியின் பாரம்பரிய விதிகளின்படியே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்றார். எந்த அரசியல் கட்சியிலும் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவில் தேர்தல் மூலம் தலைவராக ஜே.பி.நட்டாவோ, அமித் ஷாவோ தேர்வு செய்யப்பட்டதாக யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், பாஜக பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.