பா.ஜ.க. ஆளுமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
- பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு.
- பாஜகவின் வாக்குறுதிகள் பொய்யாகி விட்டதாக காங்கிரஸ் கருத்து.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது அங்குள்ள தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல்வானி கூறியுள்ளதாவது: பாஜக ஆட்சி ஜம்மு காஷ்மீரை பல துறைகளில் அழித்து விட்டது, அடையாளம், அந்தஸ்து, வேலைகள், நிலங்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஜம்மு காஷ்மீர் இழந்து விட்டது.
அதை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். காஷ்மீரில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் நிர்வாகம் தவறி விட்டது. காஷ்மீர் சிறுபான்மையினரும், ஜம்மு ஊழியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பற்ற பகுதிகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சம்பளமும் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒளிமயமான எதிர்காலம், விலைவாசி கட்டுப்பாடு, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று அவர்களது (பாஜக) வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. மக்கள் சுரண்டப்படுகின்றனர். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை தவிர வேறு ஒன்றும் இங்கு இல்லை. பிற மாநிலங்களை விட ஜம்மு காஷ்மீர் வரலாற்று ரீதியாக மிகவும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டது. ஆனால் இப்போது அது அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.