ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு 71.8 கோடி ரூபாய் செலவு செய்த காங்கிரஸ்
- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.
- மொத்தம் 145 நாட்கள், 4500 கி.மீ. கொண்டதாக நடை பயணம் அமைந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி வருடாந்திர தணிக்கை அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 2023 ஜனவரி 30-ந்தேதி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டார்.
இதற்காக 71.8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் விதம் மொத்த நாளைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 1.59 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கட்சிக்கு 452 கோடி ரூபாய் நிதி கிடைத்த நிலையில் 2022-2023-ம் ஆண்டில் 467 கோடி ரூபாய் செலவு ஆனதாக தெரிவித்துள்ளது. இதில் 192 கோடி ரூபாய் தேர்தல் செலவாகும்.
ராகுல் காந்தியின் நடை பயணம் மொத்த 145 நாட்கள் (இடைவெளி நாட்களும் சேர்த்து) கொண்டதாக இருந்தது. மொத்தம் 4500 கி.மீட்டர் தூரம் உள்ளடக்கியதாகும்.
2021-22-ல் செலவு 400 கோடியாக இருந்த நிலையில் 2022-2023-ல் 467 கோடியாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் கட்சி நிதி 2021-22-ல் 541 கோடியாக இருந்த நிலையில், 2022-23-ல் 452 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.