ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்களா?: காங்கிரஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
- கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது.
- ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.
அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.