சிறுபான்மையினருக்கு மாட்டிறைச்சி உண்ணும் உரிமையை அளிக்க காங்கிரஸ் விரும்புகிறது: யோகி ஆதித்யநாத்
- காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
- நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்
உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,
"காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.
அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.
நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.
'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.