இந்தியா

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: இது புத்தாண்டின் முதல் பரிசு என காங்கிரஸ் கண்டனம்

Published On 2023-01-01 11:10 GMT   |   Update On 2023-01-01 11:10 GMT
  • கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி.

புதுடெல்லி:

ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721, கொல்கத்தாவில் ரூ.1870 என விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வால், உணவகங்கள் பாதிக்கப்படும். உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

'புத்தாண்டின் முதல் பரிசாக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இப்போது 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்' என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல் வீட்டு உபயோக சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன. ஆனால் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஆனால், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

Tags:    

Similar News