இந்தியா

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது: பிரதமர் மோடி

Published On 2023-11-13 08:59 GMT   |   Update On 2023-11-13 08:59 GMT
  • தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.
  • காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரை கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 7-ந்தேதி முடிவடைந்தது. 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி சத்தீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் இன்று மதியம் முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது:-

தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.

ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது. அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

Similar News