வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்கு
- கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வாகி உள்ளனர்.
- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 27 பேர் கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர்
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களில் 251 (46%) பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கிரிமினல் வழக்குகளை கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த 251 எம்.பி.க்களில் 170 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வெற்றி பெற்றுள்ள புதிய எம்.பி.க்களில் 27 பேர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். இதில் கொலை, கடத்தல், கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்களில் 94 பேர் மீதும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 49 பேர் மீதும், சமாஜ்வாதி வேட்பாளர்களில் 21 பேர் மீதும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களில் 13 பேர் மீதும், தி.மு.க. வேட்பாளர்களில் 13 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.