குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை இழந்த காங்கிரஸ்: சி.டி.ரவி விமர்சனம்
- விசாரணை என்ற பெயரில் அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
- நாங்கள் ஊழல் செய்திருந்தால் தானே எங்களுக்கு பயம் இருக்கும்.
பெங்களூரு :
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த குறுகிய காலத்திலேயே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இன்று தேர்தல் நடைபெற்றால் அக்கட்சி தோல்வி அடையும். பா.ஜனதா ஆட்சியில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதாக சொல்கிறார்கள். மலையை குடைந்து பார்த்தால் எலி கூட கிடைக்காது. அது போல் தான் பா.ஜனதா ஆட்சி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டை கூறினார்கள்.
நாங்கள் ஊழல் செய்திருந்தால் தானே எங்களுக்கு பயம் இருக்கும். ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினார். அதற்கு அவர் ஏதாவது ஆதாரங்களை கொடுத்தாரா?. விசாரணை என்ற பெயரில் அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் தவறு செய்தவர்களை பா.ஜனதா அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
நாங்கள் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்ததால் தான் இன்றும் 50-க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர். பிட்காயின் முறைகேடு நடந்திருந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுக்கட்டும். அரசு அதிகாரிகள் பணி இடமாறுதலுக்கு லஞ்சம் கைமாறுகிறது. ஒரே பணிக்கு ஒரே மாதத்தில் 4 முறை நியமனம் நடந்துள்ளது. இதில் சந்தேகம் எழவில்லையா?.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.