மும்பை உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் உணவில் செத்த எலி- மேலாளர் உள்பட 3 பேர் கைது
- வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார்.
- உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு சபர்பன் பந்த்ரா பகுதியில் உள்ள உணவகத்திற்கு உணவு சாப்பிட வந்துள்ளார்.
அப்போது அவர், சிக்கன் கிரேவி உணவை ஆர்டர் செய்தார். உணவகத்தில் அவருக்கு பரிமாறப்பட்ட கிக்கன் உணவில் சிக்கனுடன் சேர்ந்து செத்த எலியும் இருந்தது. இதைக்கண்டு வங்கி அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார். சிக்கன் துண்டு என்று நினைத்து கடித்த வங்கி அதிகாரிக்கு வித்தியாசம் தெரியவே அதனை உன்னிப்பாக கவனித்தார். அப்போதுதான் அது சிக்கன் துண்டு அல்ல.. சுண்டெலி என்று தெரியவந்தது.
இதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்தபோது அது எலிதான் என்பது நிரூபணமானதை அடுத்து, வங்கி அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர்.
சிறுது நேரத்தில் வங்கி அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
இதைதொடர்ந்து, உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.