நூதன முறையில் 4 கிலோ தங்கம் கடத்தல்: குவைத்தை சேர்ந்த 3 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
- கடந்த இரண்டு வாரத்திற்கு முன் 2.92 கோடி ரூபாய் மிதிப்பிலான தங்கம் பறிமுதல்
- தற்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, லக்கேஜ் வைக்கும் டிராலியில் மறைத்து தங்கம் கடத்த முயன்றதாக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 5,319 கிராம் எடையுள்ள 50 தங்க செயின்கள் பறிமுதல் செய்திருந்தனர். இதன் மதிப்பு 2.92 கோடி ரூபாய் ஆகும்.
இந்த நிலையில் இன்று குவைத் நாட்டைச் சேர்ந்த மூன்று பயணிகள் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது 4 கிலோ தங்கத்தை வெள்ளி முலாம் பூசி மறைத்து கொண்டு வந்ததை கண்டு பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர். இதன் மதிப்பு 2.06 கோடி ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.