இந்தியா

பாராளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோவில் குறித்து விவாதம்

Published On 2024-02-10 07:35 GMT   |   Update On 2024-02-10 07:35 GMT
  • உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
  • கடந்த மாதம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.3,000 கோடி செலவில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி அந்த ஆலயத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் வடமாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சத்யபால்சிங், பிரதாப் சந்திரா சாரங்கி, சிந்தோர் பாண்டே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேல்-சபையில் எம்.பி.க்கள் கே.லட்சுமணன், சுதன்ஷூ திவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

அப்போது பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்யபால் சிங், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்தது, கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ராமர், இந்துக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சொந்தமானவர். ராமரை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News