இந்தியா

தற்சார்பு இந்தியா கொள்கையால் ராணுவ பலம் அதிகரித்து வருகிறது- பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

Published On 2022-12-30 20:20 GMT   |   Update On 2022-12-31 01:21 GMT
  • இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.
  • நாட்டின் எல்லைகளை துணிச்சலுடன் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது:

தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி. தற்சார்பு தொடர்பான தகவல்களை நாராயண குரு பரப்பினார். தற்போது அந்தப் பணியை சிவகிரி மடமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நாராயண குரு, பழங்கால கலாச்சாரம் மற்றும் நவீனத்திற்கு இடையே சமநிலையைப் பராமரித்தார். இது தற்போதும் நாட்டுக்கு பொருத்தமாக உள்ளது. 


கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் நாராயண குரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மேற்கத்திய தத்துவம் என கருதப்படுகிறது.

உண்மையில் இவை பழங்கால இந்திய இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் காணப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவற்றில் சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தற்சார்பு கொள்கையை ஊக்குவிப்பதன் காரணமாகவே ராணுவ பலம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது.உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்கிறது. நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News