அசுத்தமான யமுனை நதியில் நீராடிய பாஜக தலைவருக்கு உடல் அரிப்பு.. மருத்துவமனையில் அனுமதி
- யமுனை நதியில் பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் குளித்து வழிபாடு நடத்தினார்.
- அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று கூறி டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் யமுனை நதிக்கரையில் நீராடினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விரேந்தர் சச்சுதேவ், "யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு வழங்கிய 8,500 கோடி ரூபாய்க்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
சச்தேவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், "டெல்லி நகரத்தின் யமுனை நதிக்கரையில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது. டெல்லி பாஜக தலைவர் அரியானா அரசாங்கத்துடன் பேசி சோனிபட் மற்றும் பானிபட் ஆகியவற்றிலிருந்து தொழிற்சாலை கழிவுகளை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.