கெஜ்ரிவால் ஏன் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யவில்லை: உச்சநீதிமன்றம் கேள்வி
- அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது சட்ட விரோதம். இதனால் ஜாமின் கேட்டு அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை- கெஜ்ரிவால் வழக்கறிஞர்.
- சிபிஐ-யின் வழக்கு அல்லது அமலாக்கத்துறையின் ஈசிஐஆர்-ல் கெஜ்ரிவால் பெயர் உள்ளதா?- உச்சநீதிமன்றம்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அவரிடம் "விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஏன் ஜாமின் மனு தாக்கல் செய்யவில்லை" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு அபிஷேச் சிங்வி, "அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது சட்ட விரோதம். இதனால் ஜாமின் கேட்டு அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை" என்றார்.
அதன்பின் "சிபிஐ-யின் வழக்கு அல்லது அமலாக்கத்துறையின் ஈசிஐஆர்-ல் கெஜ்ரிவால் பெயர் உள்ளதா?" என நீதிமன்றம் கேட்டது.
அதற்கு கெஜ்ரிவால் வழக்கறிஞர் "அவருடைய பெயர் இல்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.