இந்தியா

கெஜ்ரிவால் ஜாமின் மனு: விளக்கம் அளிக்க சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2024-07-05 07:15 GMT   |   Update On 2024-07-05 07:15 GMT
  • டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
  • கெஜ்ரிவால் ஜாமின் மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ந்தேதி அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 26-ந்தேதி சிபிஐ-யால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ந்தேதி வரை விசாரணை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இந்நிலையில் சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பயங்கரவாதி அல்ல என்றும், அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு அவரை சிபிஐ கைது செய்ததாகவும் கூறினார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிபி சிங், ஜாமின் மனுவை முதலில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் கெஜ்ரிவால் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து வாதங்களை கேட்ட நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கெஜ்ரிவால் ஜாமின் மனு தொடர்பாக சிபிஐ பதில் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பினார். மேலும் ஜூலை 17-ந்தேதி ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News