3 மாணவர்கள் மரணம்- டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.
- தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் செயல்பட்டு வரும் ரவு ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி அங்கு படித்து வந்த 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.
தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 2 மாணவிகளும் ஒரு மாணவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பயிற்சி மையத்தின் உரிமையாளரான அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் குற்றமற்ற கொலை மற்றும் கவனக்குறைவு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 3 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சம்பவம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்கள் தானியா சோனி (25), ஸ்ரேயா யாதவ் (25), நெவின் டால்வின் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரேயா உத்தரபிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், தன்யா சோனி தெலுங்கானாவையும், நவீன் டால்வின் கேரளாவின் எர்ணாகுளத்தையும் சேர்ந்தவர்கள்.
டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், "கட்டிடங்களின் அடித்தளத்தில் இருந்து செயல்படும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுபோன்ற பயிற்சி மையங்கள் கட்டிட விதிகளை மீறுவதாகவும், விதிமுறைகளின்படி இல்லை" என்றும் அவர் கூறினார்.