இந்தியா

டெல்லியில் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Published On 2024-06-30 01:56 GMT   |   Update On 2024-06-30 01:56 GMT
  • சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் டெல்லி விமான நிலைய 1-வது முனையத்தின் வெளிப்புற மேற்கூரை சரிந்து விழுந்தது.
  • மழையின் பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை.

புதுடெல்லி:

கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் மழை அளவு டெல்லியில் நேற்று முன்தினம் பதிவானது. 24 மணி நேரத்தில் 23 செ மீ. மழை பெய்து டெல்லியை தண்ணீரில் தத்தளிக்க வைத்து விட்டது. சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் டெல்லி விமான நிலைய 1-வது முனையத்தின் வெளிப்புற மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானார். 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே வசந்த் விகார் பகுதியில் கட்டுமான பணியில் இருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் கட்டுமான குழியின் உள்ளே சிக்கினர். அவர்களின் நிலை என்ன ஆனது? என தெரியாமல் இருந்தது. இதுபோல வேறு சில இடங்களில் மின்சாரம் தாக்கியும், தண்ணீரில் மூழ்கியும் சிலர் இறந்துள்ளனர். அதுபற்றிய விவரங்கள் நேற்று முன்தினம் உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மொத்தம் 11 பேர் டெல்லி மழைக்கு பலியாகி இருப்பது தெரியவந்தது. வசந்த் விகார் பகுதியில் கட்டுமான குழிக்குள் விழுந்த 3 பேர் இறந்து விட்டனர். இதைப்போல நியூ உஸ்மான்பூர் மற்றும் சாலிமார் பாக் பகுதியில் 2 பேர் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். பிரேம்நகர் பகுதியிலும் ஒருவரும், ஓக்லா இண்டஸ்ட்ரியலில் ஒருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். முபாரக்பூர் பகுதியில் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். மேலும் சிராஸ்பூர் சுரங்கப்பாதையின் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்கள் இறந்தனர். ஆக மொத்தம் 11 பேர் ஒரேநாள் மழையில் பலியாகி விட்டனர்.

இதற்கிடையே மழையின் பாதிப்புகள் இன்னும் சீராகவில்லை. இதைப்போல மின்சாரம் தடைபட்ட நிஜாமுதீன், ஜங்புரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இருந்தாலும் நேற்று மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் மீட்பு பணிகள் பாதித்தன.

Tags:    

Similar News