ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்
- கடந்த நான்கு நாட்களாக பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வந்தது.
- சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், 9 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரியாசி, கத்துவா, டோடா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 9 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டது. மேலும் ஒரு சிஆர்பிஎஃப் வீரரும் மரணம் அடைந்தார். ஏழு பாதுகாப்புப்படை வீரர், பல பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தின்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பான நிலை குறித்து முழுமையாக கேட்டறிந்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான திறன் அனைத்தையும் முழுமையாக தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் பேசியுள்ளார். அவரிடமும் பாதுகாப்புப்படைகளை குவிக்கவும் பயங்கரவாத தடுப்பு செயல்பாடுகளை தீவிரப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.
அன்றைய தினம் இரவு கத்துவா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். அதேவேளையில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.
நேற்று மாலை டோடா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் லஷ்கர்-இ-தொய்வா இயக்கம் இருப்பதாக நம்புவதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.