இந்தியா

சபரிமலை வரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம்- சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும்: தேவசம்போர்டு அறிவுறுத்தல்

Published On 2024-11-06 10:37 GMT   |   Update On 2024-11-06 10:37 GMT
  • கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர பூஜையின் போது ஸ்பாட் புக்கிங்கிற்காக 3 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
  • மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் சபரிமலைக்கு சிரமமின்றி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதற்கு தேவையான வசதிகள் தேவசம் போர்டு சார்பில் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன.

அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' அடிப்படையில் 70 ஆயிரம் பேர், 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' செய்வதற்கு வசதியாக பம்பை, எருமேலி, பர்மேடு ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர பூஜையின் போது ஸ்பாட் புக்கிங்கிற்காக 3 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இந்த கவுண்டர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

'ஸ்பாட் புக்கிங்' செய்யும் பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் 'கியூ-ஆர் கோர்டு' மற்றும் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக அமைப்பை தயார் செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

மேலும் சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள், இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.

மேலும் கற்பூரம், சாம்பிராணி போன்றவை பூஜை பொருட்களாக இருந்தாலும், தீ ஆபத்தை கருத்தில் கொண்டு அவற்றை எரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News