இந்தியா

பிரதமர் மோடி உலக தலைவராகி விட்டார்: தேவேந்திர பட்னாவிஸ் பெருமிதம்

Published On 2023-05-26 02:33 GMT   |   Update On 2023-05-26 02:33 GMT
  • சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் உயர்வு இந்தியாவின் உயர்வுதான்.
  • நோய்வாய்ப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எங்களிடம் மருந்து இல்லை.

மும்பை :

பிரதமர் மோடி சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அடுத்த மாதம் அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜப்பானில் ஹிரோசிமாவில் சமீபத்தில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம் இருந்து ஆட்டோகிராப் கேட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடிக்காக வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்துக்கு பாஸ்களை வழங்க முடியாமல் திணறுவதாக கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் நரேந்திர மோடியை பாஸ் என்று அழைக்கிறார். பப்புவா நியூ கினியா மற்றும் பிஜி போன்ற நாடுகள் அவருக்கு மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளை வழங்குகின்றன.

எங்கள் தலைவர் தற்போது உலக தலைவராகி விட்டார். இதற்காக சிலர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி இருந்தாலும், அவர்கள் வேதனையில் மனம் குமுறுவதாக தெரிகிறது.

எப்படி பார்த்தாலும் பிரதமர் மோடி உலக தலைவராகிவிட்டார். ஆனால் நோய்வாய்ப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எங்களிடம் மருந்து இல்லை.

சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் உயர்வு இந்தியாவின் உயர்வுதான். ஆனால் நாட்டில் சிலர் இதை பார்க்க தவறி விடுகிறார்கள்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒருமுறை சரத்பவாருக்கு எதிராக உச்சரித்த வார்த்தைகளை என்னால் இங்கு கூற முடியாது. அதேபோல உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இப்போது அவர் பேசிய வீடியோக்கள் தற்போது மீண்டும் பரப்பப்படுகின்றன.

பிரதமர் மோடியை எதிர்க்க மட்டுமே அவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். ஆனால் மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News