பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருந்ததா?-சரத்பவார் கேள்வி
- தற்போது ‘மோடி கேரண்டி' என்ற ஒன்று இல்லை. இன்று ‘மோடி அரசும்' இல்லை.
- மோடி என்னை ஓய்வின்றி அலைந்து திரியும் ஆத்மா என கூறியிருந்தார்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் 25-வது நிறுவன நாள் கொண்டாட்டம் சரத்பவார் கட்சி சார்பில் அகமதுநகரில் நடந்தது. விழாவில் சரத்பவார் பேசியதாவது:-
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று உள்ளார். பதவி ஏற்கும் முன் அவருக்கு நாட்டின் ஆதரவு இருந்ததா?. நாட்டு மக்கள் அவருக்கு ஒப்புதல் அளித்தார்களா?. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. அவர்கள் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் போன்றோரின் உதவியை பெற்றுக்கொண்டனர். அவர்களால் தான் மோடியால் அரசு அமைக்க முடிந்தது.
இதற்கு முன் அமைந்த அரசுக்கும், தற்போது அமைந்துள்ள அரசுக்கும் வேறுபாடு உள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது மோடி எங்கு சென்றாலும், 'இந்திய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார். 'மோடி அரசு', 'மோடி கேரண்டி' போன்ற வாா்த்தைகளை தான் கூறி வந்தார். தற்போது 'மோடி கேரண்டி' என்ற ஒன்று இல்லை. இன்று 'மோடி அரசும்' இல்லை. உங்களின் ஓட்டால் இன்று அவர்கள் இது 'மோடி அரசு' அல்ல, இந்திய அரசு என கூறும் நிலையில் உள்ளனர்.
இன்று வாக்காளர்களால் அவர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பிரதமா் பதவி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானது அல்ல. அரசு நாட்டின் எல்லா பிரிவு பற்றியும் யோசிக்க வேண்டும். ஆனால் மோடி அதை மறந்துவிட்டார். அவர் வேண்டுமென்றே அதை செய்தார் என்று தான் நான் நினைக்கிறேன்.
முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சி ஆகிய சிறுபான்மையினரும் நாட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் மோடி அதை செய்ய தவறிவிட்டார்.
பிரசாரத்தின் போது அவர் குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக குழந்தை இருப்பது பற்றி பேசினார். அவர் இஸ்லாமியர்கள் குறித்து தான் பேசினார் என்பது தெளிவாக தெரிந்தது.
எதிர்க்கட்சியினரின் கையில் ஆட்சி சென்றால் பெண்களின் தாலியை பறிப்பார்கள் என்றெல்லாம் பேசினார். இதுபோல நாட்டில் நடந்தது உண்டா?. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவரிடம் 2 எருமை இருந்தால், ஒன்றை பறித்துவிடுவார் என்றும் பேசினார். ஒரு பிரதமர் இதுபோல பேசலாமா?. மற்றவர்களை விமர்சிக்கும் போது மோடி எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதில்லை.
பிரதமர் மோடி உத்தவ் தாக்கரே கட்சியை போலி சிவசேனா என கூறினார். பிரதமர் பதவியில் இருப்பவர் ஒருவர், ஒரு கட்சியை போலி என கூறலாமா?. ராமர் கோவிலை கட்டியது அரசியல் தொடர்பானது என சிலர் நினைத்தனர்.
ஆனால் அயோத்தியிலேயே பா.ஜனதா வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். நாளை நான் ராமர் கோவிலுக்கு சென்றாலும், அதை நான் அரசியலுக்காக பயன்படுத்த மாட்டேன். பிரதமர் மோடி செய்த தவறை அயோத்தி மக்கள் புரிந்து கொண்டனர். எனவே அங்கு பா.ஜனதா வேட்பாளரின் தோல்வியை உறுதி செய்தனர்.
மோடி என்னை ஓய்வின்றி அலைந்து திரியும் ஆத்மா என கூறியிருந்தார். அது நல்லது தான். ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. இந்த ஆத்மா உங்களை விடாது.
இவ்வாறு அவர் கூறினார்.