இந்தியா

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு 25-ந்தேதி பதவி ஏற்கிறார்

Published On 2022-07-22 01:58 GMT   |   Update On 2022-07-22 01:58 GMT
  • 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார்.
  • இவர் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி ஆவார்.

புதுடெல்லி :

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி.

நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்த தேவை ஏற்பட்டால், ஜூலை 18-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி தனது ஆளுமையை நிரூபிக்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்தது.

இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்முவை (வயது 64) வேட்பாளராக களமிறக்கியது. அவரை ஆதரித்து பழங்குடியினருக்கு நியாயம் சேர்க்குமாறு எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொண்டது.

ஆனால் மத்திய அரசுக்கு எதிரான தங்கள் ஒற்றுமையை நிரூபிக்கும் வகையில் களமிறங்கிய எதிர்க்கட்சிகளோ, பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தன. இதற்காக பல்வேறு தலைவர்களின் பெயரை பரிசீலித்து, கடைசியில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை இறுதி செய்தன.

இந்திய ஜனாதிபதியை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வதால், இந்த மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை பெறுவதற்கு இரு அணியினரும் தீவிர களப்பணியாற்றினர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கிய திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநிலங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. எம்.பி.க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க நாட்டின் 30 இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சுமார் 4,800 ஆக இருந்த நிலையில், இதில் 99 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கு நாடாளுமன்றத்தின் 63-ம் எண் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி மேலும் சில கட்சிகள் என சுமார் 44 கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தன. அத்துடன் வாக்குப்பதிவின்போதும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அணி மாறி திரவுபதி முர்முவுக்கு வாக்களித்தனர். இதனால் அவருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.

அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.

திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார்.

மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3-வது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News