பட்டினி கிடந்தபோது உதவிய நண்பர்.. 14 வருடங்களுக்கு பிறகு சந்தித்த DSP நெகிழ்ச்சி பதிவு
- போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார்.
- சல்மானை கட்டிப்பிடித்து DSP சந்தோஷ் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் 14 வருடங்களுக்கு பிறகு காய்கறி வியாபாரம் செய்யும் தனது நண்பரை சந்தித்தது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் படேல் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் படேல் தனது போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு காய்கறி கடையில் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார்.
போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காய்கறி கடை நடத்தி வந்த சல்மான் கான் பயந்துள்ளார். அப்போது என்னை நியாபகம் இருக்கிறதா என்று சந்தோஷ் சல்மானை பார்த்து கேட்டுள்ளார். அதற்கு தலையை அசைத்த சல்மான் உங்களை என்னால் மறக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். உடனே சல்மானை சந்தோஷ் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் போபாலில் பொறியியல் படிக்கும் போது கையில் காசில்லாமல் இரவு உணவு கூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன். அந்த சமயத்தில் தான் காய்கறி கடை நடத்தி வரும் சல்மான் கானை சந்தித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அவர் எனக்கு இலவசமாக காய்கறிகளை கொடுத்தார். ஒவ்வொரு இரவும் கத்தரிக்காயையும் தக்காளியையும் எனக்கு கொடுத்தார். அதனை சமைத்து எனது பசியை நான் போக்கிக்கொண்டேன்.
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாங்கள் எதிர்பாராத விதமாக சந்தித்தோம். இதனால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தோம். நம்முடைய கடினமான காலங்களில் துணை நின்ற ஒருவரை மறப்பது பாவமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.