இந்தியா

அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Published On 2024-08-31 14:24 GMT   |   Update On 2024-08-31 14:24 GMT
  • அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் முதல் மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அரியானாவில் பிஜோனி சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை தேர்தல் நடைபெறவிருந்த நாளன்று வருவதால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News