காங்கிரசுக்கு எதிரான கருத்து: முன்னாள் முதல் மந்திரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- தேர்தல் நெருங்கிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காங்கிரஸ் பற்றி சந்திரசேகர ராவ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர். தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நாய்களின் மகன்கள் என்றும், விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 போனஸ் வழங்காவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டையை கடிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். சந்திரசேகர ராவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜி. நிரஞ்சன், ஏப்ரல் 6 அன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புகார் தொடர்பாக ஏப்ரல் 18-ம் தேதி காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால் ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.