அமலாக்கத்துறை தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதியாகிவிட்டது: மெகபூபா முப்தி
- இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை.
- இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.
மக்களவை தேர்தல் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
இந்தமுறை பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனால் பா.ஜனதா சற்று அச்சம் அடைந்துள்ளது. என்றபோதிலும் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்குடன் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது.
இதற்கிடையே மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தங்களுக்கு சாதகமாக பா.ஜனதா பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பிக் கொண்டே இருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான 86 வயதான பரூக் அப்துல்லாவிற்கு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் பரூக் அப்துல்லா இன்று ஆஜராகவில்லை.
இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தேர்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது என மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-
எப்போதெல்லாம் மாநில தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்க தொடங்கிவிடும். ஆகவே, பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் வழங்கியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை. இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்குரிய பணம் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நபர்கள் அல்லாத நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் எடுத்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.