பைஜூ'ஸ் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை "லுக் அவுட்" நோட்டீஸ்
- குறுகிய காலத்தில் பைஜூ'ஸ் $20 பில்லியன் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது
- அயல்நாடுகளுக்கு தப்ப முடியாதவாறு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
கேரளாவை சேர்ந்த பொறியாளரான ரவீந்திரன் (44) என்பவரால் தொடங்கப்பட்ட இணையதள வழியாக கல்வி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம், பைஜூ'ஸ் (Byju's).
குறுகிய காலத்தில் பைஜூ'ஸ் நிறுவனம் வளர்ச்சியடைந்து $20 பில்லியன் எனும் அளவில் சந்தையில் மதிப்பிடப்பட்டது.
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் காரணமாக பல குழந்தைகளுக்கு இணையவழி கல்வி ஒரு விருப்பமான மாற்றாக இருந்து வந்தது. அப்போது பைஜூ'ஸ் பெரும் வருவாய் ஈட்டியது.
ஆனால், கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு கல்லூரிகளும், பள்ளிகளும் திறக்கப்பட்டதால், இணைய வழிமுறையில் கல்வி பயில பலர் ஆர்வம் காட்டவில்லை.
போதிய வருவாய் இல்லாததால், பைஜூ'ஸ், இணையவழி பயிற்சியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் தள்ளப்பட்டது.
பைஜூ'ஸ் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இதனால், இந்நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.
இந்நிலையில், அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றதில், அந்நிய செலாவணி மேம்பாட்டு சட்டத்தின்படி (FEMA), சுமார் ரூ. 9,362 கோடி அளவிற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரவீந்திரன் மீது அமலாக்கத் துறை (Enforcement Directorate) குற்றம் சாட்டியது.
இதன் தொடர்ச்சியாக , ரவீந்திரன் இந்தியாவை விட்டு வெளியேற சாத்தியம் உள்ளதால், அவர் அயல்நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அமலாக்கத் துறையின் பெங்களூரூ அலுவலகம் "லுக் அவுட்" (Look Out) சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ரவீந்திரன் தடுத்து நிறுத்தப்படுவார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பைஜூ'ஸ் நிறுவனருக்கு இது மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.